×

மாநகரில் ஒரு மாதத்தில் 235 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 108 பேர் கைது

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 235 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டு 108 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயமும், காங்கயம் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு தொழில் நிறுவனங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி அசாம், ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில் 400க்கும் மேற்பட்டோர் புதிதாக வேலைக்காக வருகின்றனர். இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். மேலும், சிலர் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். இப்படி பல தொழில்கள் நடைபெறும் திருப்பூரில் பான் மசாலா மற்றும் கஞ்சா விற்பனையும் நடைபெற்று வருகிறது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் பெருமபாலும் திருப்பூரில் தங்கியுள்ளனர். வடமாநிலத்தவர்கள் கட்டாயம் பான்மசாலா, குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், திருப்பூரில் குட்கா பான் மசாலா போன்றவைகளை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி திருப்பூர் மாநகரில் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை பான் மசாலா, குட்கா விற்பனை செய்யப்பட்டதாக 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 235 கிலோ பான் மசாலா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பான்மசாலா, குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமண அலுவலர் விஜயலலிதாம்பிகை உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைத்தனர்.இது குறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருப்பூர் மாநகரில் பான் மசாலா, குட்கா விற்பனை குறித்து தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குட்கா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் சொத்துகள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை முடக்கம் செய்து வருகிறோம். எனவே பான் மசாலா, குட்கா இல்லாத திருப்பூர் என்ற இலக்குடன் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அதனையும் மீறி விற்பனை செய்வதை பார்த்தால் பொதுமக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், போலீசார் அவர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார்கள். அது குறித்து அதிகாரிகள் கண்காணித்தும் வருகிறார்கள். இவ்வாறு கூறினார்.

The post மாநகரில் ஒரு மாதத்தில் 235 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 108 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Gutka ,Dinakaran ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி